அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்குகியது.சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்
நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதையும் படியுங்கள் : பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்! – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக பல்வேறு
சலுகைகளை வழங்கியுள்ளார். அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். ஐந்து வயது இருக்கக்கூடிய குழந்தைகளை தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா காலத்திற்கு முன்னர் 12 லட்சம் வரை மாணவர் சேர்க்கையானது இருந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு வரை 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். முதலமைச்சரின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையாலும், பல்வேறு திட்டங்கள் அரசுப் பள்ளியில் கொண்டு வந்திருப்பதாலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வழக்கமாக பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை துண்டு பிரசுரங்கள் மூலம் கொண்டு வருவது வழக்கம்தான். ஒரு துறையின் அமைச்சராக நேரடியாக நீங்களே சென்று சேர்க்கும் பொழுது, இன்னும் அதிகப்படியான மாணவர்கள் வருவார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளியை மக்கள் தேடி வரவேண்டும். அரசுப் பள்ளியை நோக்கி, இன்று அதிகமான மாணவர்கள் வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் தெரிவிக்கும்பொழுது, TRB மூலமாக 10,143 ஆசிரியர்களை பணியமர்த்தும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். சில இடங்களில் தற்காலிக ஆசிரியர்களையும் நியமித்து வருகிறோம்.
கட்டணம் அதிகரிப்பு குறித்து தனியார் பள்ளிகளுக்கு கண்டனமாக தெரிவிக்கவில்லை. வேண்டுகோளாக தெரிவித்திருக்கிறோம். பள்ளிக் கட்டணம் கட்டாத மாணவர்களை பள்ளிக்கு வெளியே அனுப்ப வேண்டாம் என்றும், மாணவர்களின் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும் கோரிக்கையாகவே வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.