செஸ் ஒலிம்பியாட் போட்டியில் எஞ்சாமி பாடலின் போது அறிவு இடம் பெறாதது சர்ச்சையாகி வந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுதியாக உண்மை வெல்லும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் இந்தியாவின் பராம்பரிய நடனங்களான மணிப்புரி, கதக், கதகளி, மோகனியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ள எஞ்சாமி எஞ்சாமி பாடலும் இடம் பெற்றது. இந்த பாடலில் பாடகி தீ இணைந்து பாடியிருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் அறிவு பாட்டி குரலிலும் பாடி அசத்தியிருப்பார். இந்த பாடல் சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாடகி தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் இந்த பாடலை பாடினர். அப்போது தெருக்குரல் அறிவு இந்த மேடையில் இல்லை. பாடலின் முதுகெலும்பாக இருந்தவரே மேடையில் இடம்பெறாதது சர்ச்சையானது.
இந்தவிவகாரம் தொடர்பாக தெருக்குரல் அறிவு இதுவரை எந்தவொரு கருத்தும் கூறவில்லை. இந்நிலையிலில் அறிவு இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்து உள்ளார். அதில், “எஞ்ஜாமி எஞ்சாமி பாடலை நான் இசையமைத்து, எழுதி, பாடிய பாடல்.. இந்தப் பாடலை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையைக் கூட கொடுக்கவில்லை. இந்த பாடலுக்காக சுமார் 6 மாதங்கள் தூக்கமில்லாமல், அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்து உள்ளேன். இந்த பாடல் முழுமையாக எனது குழுவின் கூட்டு முயற்சியால் உருவானதாகும்.
நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளான என் முன்னோர்களின் வரலாறு இல்லை என்று ஆகாது. எனது ஒவ்வொரு பாடல்களும் தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும். இதுவும் அதுபோன்ற ஒரு பாடல் தான். எங்கள் மண்ணுக்கு 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. அவை முன்னோர்களின் மூச்சு, வலி, வாழ்க்கை, அன்பு, எதிர்ப்பு மற்றும் இருப்பு என அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள் ஆகும்.
இவை அனைத்தையும் அழகான பாடல்களின் மூலம் உங்களிடம் சேர்க்க முடிகிறது. ஏனென்றால் எங்கள் ரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகள் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை இது. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும்!” என்று பதிவிட்டு உள்ளார்.









