இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்றுள்ளது.
நெதர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டம் ஆம்ஸ்டெல்வீன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, முதலில் விளையாடி இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்களை குவித்து புதிய சாதனையை படைத்தது. இதுவரை எந்தவொரு ஒரு அணியும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த ஸ்கோரை தொட்டதில்லை.
தொடக்க ஆட்டக்காரர் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தாலும், சால்ட் (122 ரன்கள்), மலான் (125 ரன்கள்) ஆகியோர் சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் மொத்தம் 14 சிக்ஸர்களையும் 7 பவுண்டரிகளையும் விளாசினார்.
கேப்டன் மோர்கன் டக் அவுட் ஆனாலும், அவருக்கு அடுத்து களம் இறங்கிய லிவிங்ஸ்டன் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 499 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நெதர்லாந்து விளையாடி வருகிறது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 498 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை எடுத்த அணி என்ற புதிய சாதனையை படைத்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தது.
அதுமட்டுமல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணிகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையும் இங்கிலாந்து அணியே வைத்துள்ளது. இதற்கு முன்பு 2016ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது.
2018இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. தற்போது, நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தனது முந்தைய இரண்டு சாதனைகளையும் முறியடித்து 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் தனது முதல் ஒரு நாள் கிரிக்கெட் சதத்தை பிலிப் சால்ட் பதிவு செய்தார். ஜோஸ் பட்லருக்கு பிறகு, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் பதிவு செய்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை டேவிட் மலான் படைத்தார். இங்கிலாந்து அணிக்காக ஒரு நாள் ஆட்டத்தில் இரண்டாவது முறையாக அதிகவேகமாக சதம் பதிவு செய்த சாதனையை பட்லர் படைத்தார்.
இதேபோல், லியாம் லிவிங்ஸ்டன் அதிவேகமாக அணிக்காக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
-மணிகண்டன்