நாட்டில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை கெடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடி கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்தியாவின் வடக்கே இந்தி பேசும் மக்களின் அப்பாவித்தனத்தை பாஜக அரசு பயன்படுத்திக் கொள்கிறது என சாடினார்.
வடமாநில மக்களிடம் சரியான விழிப்பு உணர்வும் அரசியல் மாற்றமும் ஏற்படும் போதுதான் நாடு தழுவிய மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார். நாட்டில் எப்போதெல்லாம் மோடிக்கு எதிரான கொந்தளிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சினையை பாஜக அரசு கையில் எடுத்துக் கொள்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலிமை பெற வேண்டும். அவை தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டால் தான் பாஜகவின் வலதுசாரி தீவிரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.

மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை கண்டு மக்கள் அச்சப்படவில்லை மாறாக நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலைப் படுவதாகவும், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இணைந்து நாட்டை மாற்றுப் பாதைக்கு
இட்டுச் செல்ல வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் இதனை சீர்குலைக்கும் வேலையைத்தான் பாஜக செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அவரவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். நாத்திகர்களும் அவர்களின் கொள்கைகளை பிரச்சாரம் செய்கின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகவே தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது. இந்த நிலைமை வட மாநிலங்களில் இல்லை. தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை வடமாநிலங்களிலும் ஏற்படுவதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும், நாட்டில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை கெடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







