எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை உள்பட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அதேபோல அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் தொலைக்காட்சி முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றன. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அமலாக்கதுறை அதிகாரிகள், அமைச்சர் பொன்முடியிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு நடத்தி வரும் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2006 -2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இந்த காலத்தில் அவர் தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளை ஒதுக்கியதாகவும், தனது மகன் கௌதம சிகாமணிக்கு 2 குவாரிகளை ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போன்று, பொன்முடியின் மகன் கௌதம்சிகாமணி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ. 7.05 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ரூ,41,57,225 க்கு இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை கௌதம சிகாமணி வாங்கியுள்ளார். இந்த பணபரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக உள்ளதாகவும் இதன்பேரில் கௌதம சிகாமாணி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரில் FEMA சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது . இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தான் தற்போது பொன்முடி மற்றும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் மேற்கொண்டிருக்கும் அதிரடி சோதனைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கர்நாடக மாநிலம் பெங்களுருவில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதனை திசை திருப்பவே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
இதன் மூலமாக எதிரணியினரை மிரட்டுவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்யும் சூழ்ச்சியாக கூட இந்த சோதனை இருக்கலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், சித்தாந்தரீதியாக எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தில் பாஜக திடீரென எழுந்துள்ளது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயத்திற்கு எதிராக நடைபெறும் இந்த கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா










