பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர், இவரிடம் வழி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து அவரிடம் இருந்த 6 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது இந்திராணி கூச்சலிடவே அவரது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை துரத்தினர். அப்போது, அவர்களில் ஒருவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மக்களை மிரட்டி, பொதுமக்களிடம் இருந்து தப்பித்து பென்னலூர் ஏரிப் பகுதியில் மறைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் 10 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 5 ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மேவலுற்குப்பம் அருகே அவர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக, காவல்துறையினருக்குத் ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் கொள்ளையர்களில் ஒருவன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் கொள்ளையனின் ஒருவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் பெயர் முர்தாஷா என்பதும் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவருடன் பதுங்கியிருந்த மற்றொரு கொள்ளையனான சையது அக்தர் என்பவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, நகைகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.