பீகாரில் செவிலியர் ஒருவர் மருந்து இல்லாமல் வெறும் தடுப்பூசியை மட்டும் செலுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சப்ரா நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அப்போது அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள நண்பர்கள் இருவர் வந்துள்ளனர். ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது மற்றொருவர் அதனை வீடியோ பதிவுசெய்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
மாலை வீடியோ எடுத்த நபர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தனது நண்பருக்கு போன் செய்து, “உனக்கு தடுப்பூசி செலுத்தவே இல்லை, உனக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியில் மருந்து இல்லை, அது காலியாக இருந்த ஊசி” என தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட அவரது நண்பர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அந்த இளைஞர் கூறும்போது, தடுப்பூசி மையத்திலிருந்து வீடு திரும்பிய பிறகு, அங்கு பதிவு செய்த வீடியோவை பார்த்ததாகவும், அப்போது தடுப்பூசி செலுத்தும் செவிலியர், தடுப்பூசி மருந்தை எடுக்காமல் வெறும் ஊசி மட்டும் செலுத்தியது வீடியோவில் பதிவாகி இருந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த செவிலியர் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞருக்கு மீண்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்ற விவரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
பீகாரில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







