ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் சி.வி.கணேசன்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.   நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாபெரும் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின்…

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

 

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாபெரும் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு திறன் மேம்பாட்டுத்திட்டம் மற்றும் இணையதளத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து, பட்டம் பெற்றுள்ளனர் ஆனால் அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை என்றார்.

 

படித்து முடிக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற, அவர்களை தகுதியானவர்களாக மாற்றவே நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர்கல்வி, தொற்கல்வி ஆகியவற்றை இணைத்து, முதலமைச்சரின் கனவுத் திட்டமாக கொண்டுவரப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற உள்ளனர். எனவே, முதலமைச்சரின் கனவுத் திட்டத்தை நனவாக்க அனைவரும் உழைப்போம் என கூறினார்.

 

பின்னர் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி, ஆற்றல் மேம்பாடுக்காக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமே நான் முதல்வன் திட்டம். படிப்பைத் தாண்டிய பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. ஒரே நாளில் நிறைவேற்றப்படும் திட்டமல்ல இது. மாணவர்களின் எதிர்காலத்தை செங்கல், செங்கலாக கட்டும் நீண்டகாலத் திட்டம் என்றார்.

பன்மொழிப்புலமை, தொழில், வங்கியியல், கணினி பயன்பாடு, ஊடகவியல், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளல், நேர்காணல் எதிர்கொள்ளல், வாழ்க்கைத் திறன், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தொழில் முனைவோராதல் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. பாடப்புத்தகங்களை மட்டுமே வேதப்புத்தகங்களாக நினைத்தால் சான்றிதழ் பெறலாமே தவிர,வேலைவாய்ப்பைப் பெற இயலாது என்றார்.

 

இனி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளும் உயர்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.