மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!

சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்காக குழாயின் மூலம் குடிநீர் விநியோகிக்கும் போது அதனை அறிவிக்கும் கருவியை செய்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சி.பி காலனி பகுதியை சேர்ந்தவர்கள்…

சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்காக குழாயின் மூலம் குடிநீர் விநியோகிக்கும் போது அதனை அறிவிக்கும் கருவியை செய்து அசத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சி.பி காலனி பகுதியை சேர்ந்தவர்கள் இளங்கோவன்-சுமதி தம்பதியர். இளங்கோவன் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி சர்க்கரை நோயாள் பாதிக்கப்பட்டு கை, கால்களில் விரல்கள் அகற்றப்பட்ட நிலையில் இவர் நடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர்களது வீட்டில் நகராட்சி சார்பில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதி மிகவும் மேடான பகுதி என்பதால் குழாய் மூலம் வரும் தண்ணீர் வருவதில் சிக்கல் இருப்பதால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் அனைவரும் அவர்களது வீட்டின் அருகே ஆழமாக குழி தோண்டி தொட்டி கட்டி அதன் மூலமே குடிநீர் சேகரித்து பயன்படுத்துவது வழக்கம்.

மேலும் தண்ணீர் விநியோகிக்கப்படும் நேரமும் துல்லியமாக தெரியாது என்பதால், எந்த நேரத்திலும் வரும் தண்ணீர் குடியிருப்பு வாசிகளுக்கு தெரியாமல் போக தொட்டி முழுவதுமாக நீர் நிரம்பி வீணாவதுடன் தண்ணீர் தொட்டிகளில் தேங்கி நிற்பதால் கொசு உருவாகி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் உடல் நிலை சரியில்லாத மனைவி சுமதி இதனால் மிக பெரிய சிரமத்தை சந்தித்து வருவதை அறிந்த கனவர் இளங்கோவன் அதனை போக்க என்ன தன்னிடம் இருக்கும் சில பொருட்களை கொண்டு தண்ணீர் வருவதை குடும்பத்தினர் அறியும் வண்ணம் ஒரு கருவியை செய்து தன்னுடைய வீட்டில் பொருத்தி அசத்தியிருக்கிறார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், கட்டுமான தொழிலாளி என்பதால் தன்னிடம் இருக்கும் அலுமினிய பீடிங்க், கட்டுக்கம்பி, ஸ்பிரிங், ஹாலிங் பெல், லீவர் சுவிட்ச் ஆகிய சிறு, சிறு பொருட்களை கொண்டு கருவியை உருவாக்கி தண்ணீர் வரும் குழாய் அருகே வைத்ததுடன் அதில் தூக்கு செம்பை தொங்கவிட்டு அதில் குழாய் மூலம் தண்ணீர் வந்து விழுந்தவுடன் அதன் எடை காரணமாக கீழே இறங்கும் போது கம்பி மூலம் இனைக்கப்பட்டுள்ள லீவர் சுவிட்ச் ஆனாகி வீட்டினுள் பொருத்தப்பட்ட ஹாலிங் பெல் ஒலிக்கும் வண்ணம் அமைத்துள்ளார். இதனால் தண்ணீர் வந்தவுடன் ஒலி எழுப்புவதை அறிந்து தண்ணீர் வீணாகாமல் பிடித்து பயன்படுத்துகின்றனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினரும் இளங்கோவனிடம் தங்களுக்கும் இதுபோல் அமைத்து தரவும் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் இளங்கோவன் ஆழ்துளை கினறுகளில் விழும் குழந்தைகளை காப்பாற்றவும் கருவி ஒன்றிற்கான வரைபடம் தயாரித்து அதனையும் செய்து வருகிறார். மிக குறைந்த அளவு வருமானம் மட்டுமே வருவதால் கருவியை தயாரிக்க தாமதமாகுவதாகவும் விரைவில் பணம் சேர்த்து அந்த கருவியினை தயார் செய்து செயல்பாடு குறித்து விளக்குவேன் என அவர் தெரிவித்தார்.

தன்னிடம் இருக்கும் சிறு பொருட்களை கொண்டு தனது மனைவியின் சிரமத்தை போக்க கருவியை உருவாக்கிய இந்த கட்டிட தொழிலாளியின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அரசு கைகொடுத்தால் அவரின் பல்வேறு முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.