உடல்நிலை சரியில்லாததாகக் கூறி ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்த நிலையில், சுமார் 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
நீண்ட காலமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்த ஏர் இந்தியா கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஏர் இந்தியாவின் ஒரு பிரிவாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து டாடா நிறுவனம், பணி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டு உள்ளதாகவும், இதற்கு விமானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் சுமார் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படியுங்கள் : ‘கில்லி’ ரீ-ரிலீஸ் வெற்றி எதிரொலி – மீண்டும் திரைக்கு வருகிறதா விஜய்யின் ‘சச்சின்’?
இந்நிலையில், பணிக்கு வராமல் விடுப்பு எடுத்த ஊழியர்களில் சுமார் 25 பேரை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஊழியர்களின் செயல் பொதுநலனைக் குலைப்பதோடு மட்டுமல்லாமல், நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுப்பு எடுத்த மேலும் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.







