‘கில்லி’ படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் மத்தியிலும் அடுத்தடுத்து தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களில் மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது.
அந்த ஆவலுக்கு தீணி போடும் வகையில், பிரபல நடிகர்களின் ஹிட் திரைப்படங்களை மீண்டும் டிஜிட்டல் பதிப்பில் ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பாபா, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம், அஜித்குமாரின் வாலி, பில்லா என ஏராளமான திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் ‘கில்லி’ திரைப்படமும் அண்மையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், ரூ.25 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. திரையரங்குகளில் ரசிகர்கள் படையெடுத்து படத்தை கொண்டாடி தீர்த்தனர். இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
2005-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘சச்சின்’. ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படம், சிறந்த காதல் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பல தரப்பு மக்களையும் கவர்ந்திழுத்தது.
இதையும் படியுங்கள் : புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!
‘கில்லி’ படத்தை தொடர்ந்து ‘சச்சின்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவருவதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.







