எமிரேட்ஸ் விமான போக்குவரத்து நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
எமிரேட்ஸ் விமான போக்குவரத்து நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய விளம்பரத்தை வெளியிட்டது, அதில் ஒரு பெண் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் மேல் நிற்கிறார். இந்த புதிய விளம்பரத்தை வெளியிட்ட பிறகு, எமிரேட்ஸ் நிறுவனம், விமானப் போக்குவரத்து சேவைக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த விளம்பரத்தில் தொழில்முறை ஸ்கை டைவிங் பயிற்சியாளரான நிக்கோல் ஸ்மித் லுட்விக், எமிரேட்ஸ் கேபின் குழு உறுப்பினராக இடம்பெறுகிறார். விளம்பரத்தின் தொடக்கத்தில் எமிரேட்ஸ் சீருடையில் நிக்கோல், “Moving the UAE to the UK Amber list has made us feel on top of the world. Fly Emirates. Fly better” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட பலகையை கையில் வைத்துக் கொண்டு நிற்கிறார்.
கேமரா வெளியே செல்லும்போது, நிக்கோல் உண்மையில் புர்ஜ் கலீஃபாவின் நுனியில் துபாயின் ஸ்கைலைன் காட்சியின் பின்னணியில் நிற்பதைக் காண முடிகிறது. நிக்கோல் இன்ஸ்டாகிராமிலும் இந்த விளம்பரத்தைப் பகிர்ந்துள்ளார். “இது சந்தேகத்திற்கு இடமின்றி, நான் செய்த மிக அற்புதமான சாகசங்களில் ஒன்றாகும். உங்கள் ஆக்கப்பூர்வமான சந்தைப்படுத்தல் யோசனைக்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு ஒரு பெரிய பாராட்டு! குழுவின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”என்று கூறியுள்ளார்.
இதனிடையே, எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் தமது புதிய விளம்பரத்துடன், இங்கிலாந்தின் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு நன்றி என தெரிவித்திருக்கிறது.








