கோரிப்பள்ளம் பகுதியில் சாராய ஊறல்களை தண்ணீர் என நினைத்து குடித்து சுற்றி திரியும் யானைகளை கண்டு கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆந்திரா தமிழக எல்லைப் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உள்ளன. இந்நிலையில் கோரிப்பள்ளம் என்ற பகுதியில் வைக்கப்பட்டிந்த சாராய ஊறலை தண்ணீர் என நினைத்து இரண்டு யானைகளும் குடித்தது. போதையில் இரு யானைகளும் ஊருக்குள் புகுந்தன.
விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் இருக்கும் பகுதியில் அங்குமிங்கும் ஓடித்திரியும் யானைகளை கண்டு பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வனத்துறையினர் வனசரக அலுவலர் இளங்கோ தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் போலீசாரால் எந்தவித பாதுகாப்பும் தங்களுக்கு அளிக்கவில்லை என்று கூறினர்.
இரண்டு யானைகளையும் பிடிக்க கும்கி யானைகள் கொண்டு வரப்பட வேண்டும். யானைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-அனகா காளமேகன்






