பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு! தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை சின்னத்தை தவெக கட்சி பயன்படுத்துவது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது எனவும், யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரியும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பகுஜன் சமாஜ் அளித்த மனு, சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருவரும் ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

தவெகவின் கட்சிக் கொடியில் சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களின் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியிலும் ஒற்றையானை இடம் பெற்றிருக்கும்.

இந்த விவகாரத்தில், “தேர்தலுக்கு முன்பு தான் ஒரு கட்சி விண்ணபித்து சின்னத்தை பெற முடியும். எனவே ஒரு கட்சியின் கொடிக்கு நாங்கள் ஒப்புதல், அங்கீகாரம் வழங்குவது இல்லை. கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஒரு கட்சிக்கு கொடி இருக்கிறது என்றால் அந்த கட்சி தான் பொறுப்பு. மற்ற கட்சிகளின் சின்னத்தை விதிமீறாமல் கொடி இருக்க வேண்டும்” என இந்திய தேர்தல் ஆணையம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.