இங்கிலாந்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை அவர்கள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் அழைத்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மனிதனின் வாழ்க்கையில் திருமணமானது மிகவும் முக்கிய தருணமாக கருதப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் முழுமையை தம்பதிகள் எப்போதும் ஒரு முழுமையை எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் அந்த தருணத்தில் சிறு பின்னடைவுகள் ஏற்படுவது அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக பதிவாகிவிடும்.
இங்கிலாந்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சியான் மற்றும் ஜெம்மா என்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமண நிகழ்விற்காக, செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அவர்களின் வாகனம் திடீரென பழுதடைந்தது. இதனை தொடர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் டாக்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்ட படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவது சற்று சிக்கலாக இருந்தது.
அந்த நேரத்தில் ரோந்து போலீசார் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தனர். ஹெட்ஜ் எண்டில் உள்ள செயின்ட் ஜான்ஸ் சாலையில் திருமண தம்பதியை ஏற்றி சென்ற வாகனம் பழுதடைந்ததை பார்த்து அவர்கள் விசாரித்தனர். மணப்பெண்கள் தங்கள் திருமணத்தை தவறவிடப் போகிறோம் என்று மிகவும் கவலைப்பட்டதை கண்டு போலீஸ்சார் அவர்கள் தங்கள் காரில் ஏறச் சொன்னார்கள். மேலும் சில நிமிடங்களிலேயே அவர்களின் திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு வருவதற்கு உதவி செய்தார்கள்.
இதனை தொடர்ந்து திருமண தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, அவர்களுக்கு உதவியதில் மகிழ்ச்சியடைவதாக ஹெட்ஜ் எண்ட் காவல் துறை அதிகாரிகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.







