வேலைக்கு சென்ற இடத்தில் தவறான உறவு: எலக்ட்ரீசியன் தலையில் கல்லைப் போட்டு கொலை!

எலக்ட்ரீஷியன் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு மனைவியும், திருமண வயதில் 2 மகன்களும், ஒரு…

எலக்ட்ரீஷியன் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு மனைவியும், திருமண வயதில் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எலக்ட்ரீஷியனாக பணியாற்றும் இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் அவ்வப்போது கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், வேலைக்குச் செல்வதாகக் கூறி, வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார் திருப்பதி. இரவாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது செல்போனும் சுவிட் ஆப் ஆகியிருந்தது. குடும்பத்தினர் அவரை, பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், திருப்பதி சென்ற இருசக்கர வாகனம், பாஞ்சாலியூர் கிராமம் அருகே உள்ள செங்கல்சூளை பகுதியில் அனாதையாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற கிராம மக்கள், இருசக்கர வாகனம் அருகே சென்று பார்த்துள்ளனர்.

அப்போதுதான், அந்த வாகனம் கிடந்த இடத்திற்கு அருகே முட்புதரில், ஆண் சடலம் ஒன்று பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது. அருகே ரத்தக் கறையுடன் கல் ஒன்றும் கிடந்துள்ளது. இந்த பயங்கரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கிருஷ்ணகிரி தாலுக்கா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தவறான உறவால் திருப்பதி கொலை செய்து முட்புதரில் வீசப்பட்டது தெரியவந்தது. எலக்ட்ரீஷியன் வேலைக்கு அருகே உள்ள கிராமங்களுக்கு திருப்பதி சென்று வருவது வழக்கம். அப்படி, பாஞ்சாலியூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்திற்கு திருப்பதி வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு திருப்பதி என்பவரின் மனைவியுடன் திருப்பதிக்கு தவறான உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர், திருப்பதியை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திருப்பதி அதனை அலட்சியம் செய்துவிட்டு, தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் தான் எலக்ட்ரீஷியன் திருப்பதி முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். பூசாரிப்பட்டி திருப்பதி, அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply