உத்தர பிரதேசத மாநிலத்தில் கான்பூர் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு பலரும் பலத்த காயத்துடன் மீட்பு.
உத்தர பிரதேச மாநிலத்தின் அதிக மக்கள் தொகை நெரிசலுடன் இருக்கும் நகரமாக கான்பூர் உள்ளது. இந்தியாவின் 10வது பெரிய நகரம் என்றழைக்கப்படும் இந்த நகரத்தில் எப்போதுமே வாகன நெரிசல் இருப்பது வழக்கம். இந்நிலையில், டாட் மில் சாலையில் பயணித்த மின்சார பேருந்து ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பல சாலைகள் ஒன்றுசேரும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த இந்த பேருந்து, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ஏறியது. இதனால், சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார், “பேருந்து விபத்திற்கு பிறகு ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளான். இந்த விபத்தில் உயிரிழப்புகளுடன் மூன்று கார்கள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறோம்” இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்தவர்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.








