“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்” – மல்லிகார்ஜுனே கார்கே!

எதிர்கால தேர்தல்களில் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி , ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சி.பி.எம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, ஜான் பிரிட்டாஸ் எம்.பி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) சுப்ரியா சூலே எம்.பி, பி.டி.பி கட்சி தலைவர் மெகபுபா முஃப்தி, திருமாவளவன் வி.சி.க, வைகோ (மதிமுக) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடக்க உரையாற்றினார். அப்போது பேசியவர், “வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வெளிப்படைத்தன்மை வேண்டும். உண்மையான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது, நீக்கப்பட்டால் யார், ஏன் நீக்கப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். இளைஞர்கள், குறிப்பாக முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கு பதிவு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். EVM-களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும். எதிர்கால தேர்தல்களில் SIR-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலையே பயன்படுத்த வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தொகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் முழுமையாக வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். எந்தவொரு தகுதியான வாக்காளரின் பெயரும் நீக்கப்படுவதற்கு முன், அவருக்கு முன்னறிவிப்பு, நீக்கத்திற்கான காரணம் மற்றும் பயனுள்ள மேல்முறையீட்டு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

நிர்வாகத் தவறுகள், போதிய ஆவணங்கள் இல்லாமை அல்லது விழிப்புணர்வு குறைபாடு போன்ற காரணங்களால் தகுதியான வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் நம்பிக்கை கொள்ளக்கூடிய, சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படும் வகையில் தேர்தல் ஆணையம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.