தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் : நாளை வாக்கு எண்ணிக்கை – தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக காவல்துறையின் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 40-க்கும் மேற் பட்ட துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3 ஆயிரத்து 324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற் கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் துணையாக இருப்பார்கள்.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படு வதை உறுதி செய்யவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த் தப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமுகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவதை தடுக்கும் நோக்கில் ‘கி.யூ.ஆர். கோடு’ அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும். அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் ‘இ.சி.ஐ. நெட்’ செயலியிலும் பிர திபலிக்கும். மேலும், முடிவுகளை results.eci.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.