முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட், எந்தவித முன்னேற்றமும் இல்லாத பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி புதிய வரி இல்லாத பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை எனக் கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் அளிக்காத நிலையில், அளிக்காத கடனை முதலமைச்சர் ரங்கசாமி எவ்வாறு தள்ளுபடி செய்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதேபோல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், மருத்துவத்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை வர இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக எந்த வித திட்டமோ, நிதியோ பட்ஜெட்டில் அறிவிக்கப்படவிலை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.







