ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இபிஎஸ் இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தமது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் தமது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 

அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 27ந்தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் தமது கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அந்த பதில் மனுவில்,

1.ஒரு கட்சியின் விதிப்படி உட்கட்சி தேர்தல் உரிய கால இடைவெளியில் நடத்தப்பட்டதா என்பதை தான் தேர்தல் ஆணையம் பார்த்து உறுதி செய்யுமே தவிர ஒரு கட்சியின் உள்விவகாரத்தை கண்காணிக்காது

2.அ.தி.மு.க கட்சி விவகாரத்தில் கடந்த 11-07-2022 அன்று மாற்றம் செய்யப்பட்ட கட்சியின் அடிப்படை விதிகளை தேர்தல் ஆணையம் இன்னுவும் பதிவில் எடுத்துக்கொள்ளவில்லை.

3. ஏனெனில் அந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன, குறிப்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

4. அதேபோல இந்த விவகாரத்தில் எந்த தரப்பினரும் 1968ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் தொடர்பான உத்தரவு அடிப்படையில்  பிரச்சனையை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பவில்லை.

5.அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் நடத்தும் அதிகாரிக்குதான் அதிகாரம் உள்ளது. சின்னம் ஒதுக்குவதற்கான அங்கீகாரத்தை கொடுக்க கட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளதோ அவரது அங்கீகாரத்துடன் தாக்கல் செய்யும் வேட்பு மனுவை பரிசீலித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.

7. மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் விரிவான பதிலை உச்சநீதிமன்றம் எதிர்பார்ப்பதாக கூறினால் அதனை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும் என கூறியுள்ளது

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.