மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக – புரட்சி தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஜெயலலிதா உடல் போல் பொம்மையை தேசியக்கொடி போர்த்தியபடி வைத்து பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக மட்டுமே ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதாகவும், அது எந்த வகையிலும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்த நீதிபதி, தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



