கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபி ட்ரூடோவும் விவாகரத்து பெறுகின்றனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2005 ஆம் ஆண்டு மே மாதம் சோஃபி கிரிகோயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 15 வயதில் ஜேவியர், 14 வயதில் எல்லா-கிரேஸ் மற்றும் 9 வயதில் ஹட்ரியன் ஆகிய மொன்று குழந்தைகள் உள்ளனர். கனடாவில் பிரதமராக பதவியில் இருக்கும் போது மனைவியை பிரிந்த இரண்டாவது பிரதமர் ட்ரூடோ ஆவார். அவருக்கு முன், அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான பியர் ட்ரூடோ 1979 இல் அவரது மனைவி மார்கரெட்டிடமிருந்து பிரிந்தார். இருவரும் 1984 இல் விவாகரத்து பெற்றனர்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி அவரது குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பலமுறை பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், மனைவி சோஃபியும் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்ததாக நேற்று அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இருவரும் சட்டப்பூர்வ பிரிவினை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ 2020 ஆம் ஆண்டு தனது திருமண ஆண்டு விழாவில்,தனது மனைவி பற்றி பேசும் போது எனது மனைவி தான், என்னுடைய மிகப்பெரிய பலம்…. சிறந்த நண்பர் மற்றும் சிறந்த துணை என்று கூறியிருந்தார்.
அப்படிப்பட்ட இருவரும் நேற்று விவாகரத்து பெற்றதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிவு குறித்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எப்போதும் போல நாங்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நெருங்கிய குடும்பமாக இருப்போம். பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
பிரிந்த பிறகு இருவரின் கவனமும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும். ட்ரூடோ குடும்பமும் அடுத்த வாரம் விடுமுறைக்கு செல்லவுள்ளது. விவாகரத்துக்குப் பிறகு, இருவரும் குழந்தைகளின் கூட்டுக் காவலில் இருப்பார்கள். சோஃபி அதிகாரப்பூர்வமாக ஒட்டாவாவில் வசிக்கிறார். எனினும், குழந்தைகளின் கவனிப்பு காரணமாக, அவரது பெரும்பாலான நேரம் பிரதமர் இல்லத்திலேயே செலவிடப்படும்.
ட்ரூடோ, கனடாவின் 23வது பிரதம மந்திரி;
ஜஸ்டின் பியர் ஜேம்ஸ் ட்ரூடோ ஒரு கனடிய அரசியல்வாதி மற்றும் முன்னாள் ஆசிரியர் ஆவார். அவர் நவம்பர் 2015 இல் கனடாவின் 23 வது பிரதமரானார். ஏப்ரல் 2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். ஜோ கிளார்க்கிற்குப் பிறகு கனடிய வரலாற்றில் இரண்டாவது இளம் பிரதமர் ட்ரூடோ ஆவார். இவரது தந்தை Pierre Trudeau கனடாவின் பிரதமராகவும் இருந்தார். கனடாவின் பிரதமராக பதவியேற்கும் முதல் தந்தை-மகன் ஜோடி பியர் மற்றும் ஜஸ்டின்.
ஜஸ்டின் 1994 இல் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1998 இல், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் வான்கூவரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிரெஞ்சு, மனிதநேயம், கணிதம் மற்றும் நாடகம் ஆகியவற்றைக் கற்றார். 2006 இல், அவர்களது திருமணத்திற்கு அடுத்த ஆண்டு, ட்ரூடோ லிபரல் கட்சியின் இளைஞர் புதுப்பித்தலுக்கான பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2018 இல் குடும்பத்துடன் தாஜ்மஹாலைப் பார்க்கச் சென்றிருந்த கனடா பிரதமர்;
ஜஸ்டின் ட்ரூடோ 2018 இல் ஒரு வார காலப் பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவரும் குடும்பத்துடன் தாஜ்மஹாலை பார்க்க சென்றார். ஜஸ்டின் ட்ரூடோ பார்வையாளர் புத்தகத்தில் இங்கே எழுதும் போது, தாஜ்மஹால் உலகின் மிக அழகான இடம். இது எனது அருமையான வருகை, இதற்காக அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டிருந்தார். பின்னர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும் பார்வையிட்டார். காந்திநகரில் உள்ள ஸ்வாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றபோது ட்ரூடோ குடும்பத்தினர் பாரம்பரிய இந்திய உடையில் காணப்பட்டனர்.
தற்போது இந்த தம்பதிகளின் பிரிவு அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா













