ஏக்நாத் ஷிண்டே ஆட்சி விரைவில் கவிழும்-சஞ்சய் ராவத்

அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக்…

அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டதாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

சந்திரகாந்த் பாட்டீல் உண்மையைப் பேசுகிறார். அதற்காக அவரை வாழ்த்த விரும்புகிறோம். அவரது கூற்றின் மூலம் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக நியமித்திருப்பது தற்காலிகமானதுதான் என்று தெரியவந்துள்ளது. அவர் விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்க முடிகிறது. ஷிண்டே அணியினர் இப்போது கொண்டாட்டத்தில் உள்ளனர். விரைவில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார் சஞ்சய் ராவத்.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிவசேனாவில் இருந்து 39 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தனர்.

இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். பாஜகவின் தேவேந்திர பட்னவீஸ் துணை முதல்வராக பதவியேற்றிருக்கிறார்.

சஞ்சய் ராவத்

தொடக்கத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் என்றுதான் தகவல் வெளியானது. எனினும் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய சந்திரகாந்த் பாட்டீல், “நெக்கடியான இந்த சூழலில் நல்ல வலுவான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. நாங்கள் பட்னாவிஸ் தான் முதல்வர் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் பட்னாவிஸ் மற்றும பாஜக தலைமை இருவரும் கனத்த இதயத்துடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க முடிவு செய்தனர். இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. எங்களது கவலையை மறைத்துக் கொண்டுதான் அரசாங்கம் அமைக்கும் முடிவை ஏற்றோம்.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.