ஒரே நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக நிலைத்து நின்று, கடினமாக உழைத்தவருக்கு 22 லட்சம் ரூபாயை பரிசாக அவரது நிறுவனம் வழங்கியுள்ளது.
பலரும் நாம் பணி செய்யும் இடங்களில் பல்வேறு இடையூறுகள், பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை பலர் எதிர்கொண்டாலும், சிலர் எதிர்கொள்ள முடியாமல் திணறுவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இதன் காரணமாக ஒரே நிறுவனத்தில் நிலையாக பணி செய்ய முடியாமல் வெளியேறுபவர்களுக்கு, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
ஆனால் அந்த பிரச்னைகளை எல்லாம் எதிர்கொண்டு, ஒரே பணியிடத்தில் நிலைத்து நின்று கடின உழைப்பாலும், முயற்சியாலும் சாதிப்பவர்களுக்கு என்றுமே தனி அங்கீகாரம் கிடைக்கும். அந்த வகையில் 10 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் பணி செய்து வருபவரின் கடின உழைப்புக்கும், விடா முயற்சிக்கும் 22 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – ட்ரோன்கள், வான்வழி விமானங்கள் பறக்க தடை
தாஸ் மனிதவள ஆலோசனைச் சேவைகள் என்ற நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சேர்ந்தார் லினீஷ் கண்ணரன். கடின உழைப்பையும், விடா முயற்சியையும் கையிலெடுத்த லினீஷ், கடுமையாக உழைத்து, தனது நிறுவனத்திற்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்துள்ளார். லினீஷ் கண்ணரன், தாஸ் மனிதவள ஆலோசனைச் சேவைகள் நிறுவனத்தில் புதியவராக இணைந்து இன்று அதன் இயக்குநராக வளர்ந்துள்ளார்.
10 வருட சேவையை பூர்த்தி செய்த அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், கடந்த ஆண்டு அவரது முயற்சி மற்றும் கடின உழைப்பிற்காகவும், லாபத் தொகையில் இருந்து ரூ.22 லட்சத்தை பரிசாக கம்பெனி நிர்வாகம் வழங்கியுள்ளது. லினீஷின் சிறப்பான செயல்திறனுக்காக கடந்த ஆண்டு 3 லட்சம் ரூபாயை கம்பெனி வழங்கியது குறிப்பிடத்தக்கது.







