“போர் பதற்றத்தினால் சென்னை திரும்பிய மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாது” – அமைச்சர் நாசர் பேட்டி!

காஷ்மீர் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இதுவரை 226 மாணவ மாணவிகள் தாயகம் திரும்பி உள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை மேகங்கள் தொடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் எல்லையோரம் மாவட்டங்களில் கல்லூரி பயிலும் மாணவ மாணவிகள் தமிழ்நாடு அரசு உதவியால் தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அந்த வகையில் இன்று மேலும் 38 மாணவ, மாணவிகள் காஷ்மீர் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து 3 ரயில்களில் சென்னை திரும்பினர். அவர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு வாகனம் மூலம் மாணவ மாணவிகள் கரூர், தென்காசி, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்,

“தமிழ்நாடு முதல்வர் தாய் உள்ளத்தோடு, காஷ்மீரில் நடந்து வரும் பதட்டமான காலகட்டத்திலும் கண்ணின் இமை போல இரவு பகல் பாராமல் அரசு இயந்திரங்களை முடக்கிவிட்டு மாணவர்களை தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வந்து தற்பொழுது தாயகம் அழைத்து வந்த உள்ளார். மொத்தம் 242 பேர் பதிவு செய்தனர். அதில் 226 மாணவ மாணவிகள் பத்திரமாக தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்னும் 16 பேர் நாளை வர உள்ளனர். மாணவர்களுக்கு கல்வி பாதிப்பு எதுவும் இருக்காது. இந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்த சொல்லி காஷ்மீர் மாநில அரசிடம் நம்முடைய முதலமைச்சர் முறையிட்டு உள்ளார். இந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.