படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்……..!

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது ;

“இந்த பாராட்டு விழா எனக்கு கூடுதல்பொறுப்புணர்வை தருகிறது. அடுத்து நாம்தான் வருவோம். அப்போது உங்களது மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களை சேர்ந்த மாணவிகள்தான் அதிக பயன் பெற்றுள்ளனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால் 8 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது.

பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தின் மூலம் 19 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைக்க வேண்டும். எந்த துறையின் சாதனையாளர்களை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதில் அதிக முயற்சி செய்திருப்பார்கள். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. உங்கள் கல்விக்காக பெற்றோர்கள், தங்கள் பொருள். உழைப்பு எல்லாம் செலவிடுகிறார்கள்.

பெண்கள் என்றாலே அழகுதான். ஆனால் படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன். போட்டி மிகுந்த உலகில் நிலைத்து நிற்க ஒரு டிகிரி மட்டும் போதாது.மேற்கொண்டு படிக்க வேண்டும். நாட்டிலேயே வறுமை மிகுந்த மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது பொருளாதாரத்தில் 2-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் தமிழ்நாடு விளங்குகிறது. அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு. பெண்கள் பணிபுரிந்தால் ஒரு தலைமுறையே முன்னேறும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.