டெல்லியில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி துறையின் அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, கடந்த புதன் கிழமை ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், அகதிகளாக வருபவர்களை எப்போதுமே வரவேற்கும் நாடு இந்தியா என குறிப்பிட்டிருந்தார். டெல்லியில் பக்கர்வாலா பகுதியில் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் ரோஹிங்கியா அகதிகள் குடியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்திருந்த அவர், அங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றும் டெல்லி போலீசின் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இதனை மறுத்துள்ளது. டெல்லியில் சட்டவிரோதமாக வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு டெல்லி பக்கர்வாலா பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கப்படுவதற்கான உத்தரவு எதையும் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கவில்லை என அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்கியாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை டெல்லி அரசு பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், எனினும், அவர்கள் தற்போது இருக்கும் அதே இடத்தில் தொடர்ந்து இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ரோஹிங்கியாக்களை தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதுவரை அவர்களை தடுப்பு முகாமில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும், அவர்கள் தற்போது வசிக்கும் பகுதியை தடுப்பு முகாமாக உடனடியாக அறிவிக்குமாறும் டெல்லி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.











