அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசை கண்டித்து கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போகிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான அம்மா அரசு கனிவுடன் ஆய்வுசெய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கும், தினந்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிலட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.









