எடப்பாடி பழனிசாமி போலி விவசாயியாக நாடகமாடுவதாகவும், உண்மைக்கு புறம்பான அறிக்கை விடுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் 1 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறு. முதற்கட்ட கணக்கெடுப்பில் 17 ஆயிரத்து 775 ஏக்கர் மட்டுமே நீரில் மூழ்கியுள்ளது என விளக்கமளித்துள்ளார். மேலும் மீண்டும் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றிய அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் 1-ம் தேதி முதல் நேற்று வரை 902 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.35 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 670 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, 2.47 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 753 கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 3.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களைப் பார்த்தாலே நெல் கொள்முதல் தொடர்பாக எந்த விவரத்தையும் புரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே, அரசின் மீது களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சித் தலைவர் தவறான அறிக்கையை விடுகிறார் என்பது தெளிவாகும்.
வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கண்காணிக்க 5,000 வேளாண் அலுவலர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டள்ளனர்.
விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விதைகளைப் பொறுத்தவரை, நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி விதைகள் 53,182 மெட்ரிக் டன் இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயத்திற்காக தனியார் வங்கிகளிடமிருந்து அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் சூழ்நிலை ஏதும் உருவாகவில்லை. சென்ற ஆண்டைவிட கூடுதலாக ரூ.217.26 கோடி அளவில் 29,790 விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பான வகையில் அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.50 லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி பொய்யாக தம்பட்டம் அடிப்பதாக சாடியுள்ளார்.
போலி விவசாயியாக நாடகமாடியவருக்கு இந்த உண்மை நிலவரம் கூட தெரியாமல் யாரோ எழுதிகொடுத்ததை படித்துப்பார்க்காமல் அவசர கதியில் அறிக்கையாக வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
நடப்பாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அக்டோபரில் நெல் கொள்முதல் செய்வதற்கு பதிலாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாதத்தத்தின் தொடக்கத்திலேயே நெல் கொள்முதல் செய்வதை தொடங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்ற சாதனைகளை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடன் உண்மைக்கு புறம்பான அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவதாக சாடியுள்ளார்.
-இரா.நம்பிராஜன்








