தமிழ்நாட்டில் நடத்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் இருந்த அதிமுகவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்குள் சென்னைக்கு திரும்ப அதிமுக கட்சி தலைமை அறிவுறுத்தியது. அதன்படி புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு முதல் ஒவ்வொருவராக சென்னைக்கு திரும்பினர்.
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஆட்சி அமைக்க ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.







