எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கே துரோகம் செய்யும் அளவிற்கு வந்து விட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பி.எஸ் மீது கொச்சைபடுத்தி பேசிவரும் கோ.பி முனுசாமியின் பேச்சை கண்டிப்பதாக கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவல் விரட்டி அடிக்கப்பட்டவர் தான் கே.பி.முனுசாமி என விமர்சித்த அவர், ஓ.பி.எஸ் உதவியால் தான் அவர் கட்சியில் இரண்டாம் நிலை பதவியில் உள்ளார் என தெரிவித்தார்.
கே.பி முனுசாமி எங்கயும் நிலையாக இருக்கமாட்டார். நல்ல மனிதராக இருந்தால் ஓ.பி.எஸ் உதவியால் வாங்கிய பதவியை அவர் ராஜினமா செய்வாரா? என கேள்வி எழுப்பிய அவர், அப்படி செய்துவிட்டு இ.பி.எஸ் இடம் பதவி வாங்கட்டும் என்றார். விஸ்வாசம் மிக்க தொண்டன் ஓ.பி.எஸ். என தெரிவித்த அவர், ஓ.பி.எஸ் பற்றி பேசுவதற்கு கே.பி முனுசாமிக்கும் சரி அவருடன் இருக்கும் யாருக்கு உரிமை கிடையாது என எச்சரித்தார்.
வருமான வரி சோதனையின் போது தொண்டர்களை அடியாட்கள் போன்று வீட்டின் முன்பு குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்பதால் ஆயிரம் கோடி செலவு செய்தார். ஆயிரம் கோடி செலவு செய்தும் பதவி கிடைக்காத விரக்த்தியில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர் என்றார். இ.பி.எஸ் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளாரோ, அவர்கள் மூலம் பாதிப்பு வரும் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர்கள் இபி.எஸ் அணியினர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் கொள்ளையும் , கொலையும் நடைபெற்றது. அதை பற்றி ஆட்சியில் இருந்த எடப்பாடியர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா வீட்டிற்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை. கடந்த நான்கரை வருடங்களில் செய்த தவறுகளை பட்டியலிட்டு வெளியிடுவோம்.
நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம் என்றார். வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பாதுகப்பாக பார்த்துக் கொண்டவர் ஓ.பி.எஸ் தான். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எந்த சமரசமும் செய்யவில்லை.
பிரதமர் மோடி நட்பு ரீதியாகவும் கட்சியை பார்த்துக்கொள்ள இருவரையும் சமரசம் செய்து வைத்தார். யாரும், எந்த கட்சியும் சமரசம் செய்யும் அளவிற்கு அதிகமுகவினர் இல்லை.
எடப்பாடி பிரதமருக்கு துரோகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டார் விரைவில் அதுவும் வெளிவரும் என கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








