அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்; மேலும் யாரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய பிறகு சாவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20-ம் தேதி இவ்வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது.
மேலும் அடுத்த ஒரு மாதத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைத்ததற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சில தினங்களே ஆன நிலையில்,இந்த வழக்கில் தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, அதிமுக சாவி யாரிடம் இருக்கும் என்பது தெரியவரும்.
-இரா.நம்பிராஜன்