வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்னைகள்-கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

வனப் பகுதி வாழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

வனப் பகுதி வாழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அளித்து ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக அரசு, மலைவாழ் மக்களுக்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அதில் முக்கியமானது வாக்குறுதி எண். 368. அதன்படி, தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வனவளம் சார்ந்த மற்றும் வனப் பகுதி மக்களின் அன்றாட மற்றும் நெடுங்காலப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வன ஆணையம் அமைக்கப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்கள் கடந்த பின்னும், வனப் பகுதி மக்களின் நெடுங்காலப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வண்ணம் இதுவை எந்த முயற்சியையும் இந்த அரசு முன்னெடுக்கவில்லை. குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பல்வேறு நிலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளன.

மேலும், அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்தும் இந்த அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் முன்னிலையிலும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மகளிர் உள்பட பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.