தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை – எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர்  டெல்லி சென்றுள்ளார். டெல்லி சாகேத் பகுதியில்…

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர்  டெல்லி சென்றுள்ளார். டெல்லி சாகேத் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க அலுவலகத்துக்கு  இன்று எடப்பாடி பழனிசாமி சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
“சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதமர் மோடி பெருமைப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.  நாடாளுமன்றத் தேர்தலில் 330 இடங்களில்  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இருக்கும் சமயத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ளார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுகவை குறை கூற திமுகவினருக்கு அருகதை கிடையாது
நேற்று ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யார் தெரியுமா ? அவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரின் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தது அதிமுக ஆட்சியில் தான். வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது அவர்களின் ஜாமீனுக்கு வாதாடியது திமுக  வழக்கறிஞர்கள்.
அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் வெற்றி பெறுவது தான் நோக்கமாக இருக்கும்.  அப்பொழுது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தான்.கர்நாடகா அமைச்சர் டி. கே.சிவகுமாருடன் முதலமைச்சர் ஸ்டாலின்  இணக்கமாக இருக்கிறார். அவர் ஏன் மேகதாதுவில்  அணை கட்டக்கூடாது என்ற  கோரிக்கையை நேரடியாக  வைக்கக்கூடாது ? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.