உடுமலை வனச்சரகத்தில் குருமலையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர்
சிகிச்சைக்காக தொட்டில் கட்டி நேற்று அரசு மருத்துவமனை கொண்டு வந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிர் பிரிந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட
குருமலை கிராமத்தைச் சார்ந்த பழனிச்சாமி என்பவர் கடந்த இரண்டு நாட்களாக
உடல்நிலை சரியில்லாமல் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனை கொண்டு வந்து
சிகிச்சை பெற முடியாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மலை கிராம மக்கள் உடனடியாக அடர்ந்த வனப் பகுதிக்குள் தொட்டில் கட்டி சுமந்து வந்தனர். குருமலையிலிருந்து திரிமூர்த்தி மலை அடிவாரப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனையில் பழனிச்சாமி அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமியின் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பழனிச்சாமியின் உடலை குருமலை கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். சாலை வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்படும் மலை கிராம மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது தொடர்ந்து வரும் சோக கதையாகவே உள்ளது.
இவர்களின் 2006 வன உரிமைச் சட்டத்தின் படி சாலை உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விரைவில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. இறந்த பழனிச்சாமிக்கு மாசாணியம்மாள் (35) என்ற மனைவியும் மாரியப்பன் (15) என்ற மகனும் உள்ளனர்.







