நான்கு வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் கூசாமல் பேசி வருவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் என சொன்னதைச் செய்திருக்கிறோம் என தலைப்பின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகரில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வருவதற்காக, ஏராளமான வாக்குறுதிள் அறிவிக்கப்பட்டதாகவும், எதையும் நிறைவேற்றாமல் 4 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் கூசாமல் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2011 முதல் 10 ஆண்டுகள் அதிமுக திறமையான ஆட்சியை வழங்கியதாகவும், அதிக கல்லூரிகள் திறந்தது, நீர் நிலைகளை குடிமராமத்து திட்டம் மூலம் தூர் வாரியது, விவசாயிகளுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது என அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார். தவறான பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் பெற நினைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







