விதிகளை மீறி ரூ. 5,551 கோடி பரிமாற்றம் செய்ததாக ஜியோமி நிறுவன மூத்த அதிகாரிகள் இருவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜியோமி நிறுவனம், இந்தியாவில் ‘ஜியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எம்.ஐ. என்ற பெயரில் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த விலையில் போன்களை விற்பனை செய்ததால் நடுத்தர வாடிக்கையாளார்கள் ஜியோமி போனை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால் இந்தியாவில் ஜியோமி நிறுவனத்தின் போன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. அதன் வியாபாரம் பன்மடங்கு உயர்ந்து லாபத்தை குவித்தது. ‘
இந்நிறுவனம், தொழில்நுட்பத்துக்கான பங்கு என்ற பெயரில், அமெரிக்காவை சேர்ந்த இரு நிறுவனங்கள், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.
இது, ‘பெமா’ எனப்படும், அன்னிய செலாவணி பரிமாற்ற சட்டத்துக்கு புறம்பானது’ என கூறி ஜியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 5,551 கோடி ரூபாயை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது. இதை எதிர்த்து, ஜியோமி நிறுவனம் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் வங்கி கணக்கு முடக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜியோமி, தலைமை நிதி அதிகாரியும் இயக்குநருமான சமீர் ராவ், முன்னாள் நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சிட்டி, எச்எஸ்பிசி உள்ளிட்ட வங்கிகளுக்கும் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.







