ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை…!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் முண்ணனி ஹோட்டல்கள் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. உள்நாட்டு குழு ஒன்று நடத்தியதாக கூறப்படும் இந்தத் தாக்குதல்களில், 279 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தெற்காசியாவை அதிர்ச்சியடைய வைத்த இந்த கோர சம்பவம் தொடர்பான வழக்கை இலங்கையின் முதன்மை புலனாய்வு முகமையான CID விசாரித்து வருகிறது.

இதற்கிடையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு முன்னாள் ராணுவப் புலனாய்வுத் துறையின் தலைவர் சுரேஷ் சல்லே மீது குற்றச்சாட்டு எழுந்தது.

குண்டுவெடிப்பிற்கு பிறகு நடைபெற்ற அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜ்பக்‌சே பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்தர். தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். இந்த தாக்குதலானது தேர்தலில் கோத்தபய ராஜ்பக்‌ஷே வெற்றி பெறுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்ற2ச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இரு புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள பயணத்தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூவரும் வெளிநாடு சென்றால் அது விசாரணைக்குத் தடையாக இருக்கும் என்கிற புலனாய்வுத் துறையின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுரேஷ் சல்லேவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.