பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிறை கைதிகள் 216 பேர் தப்பி சென்றுள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு உட்பட்ட கராச்சி நகரில் மாலிர் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 100 பேர் இந்திய கைதிகளும் அடங்குவர்.

இந்நிலையில், மாலிற் மத்திய சிறையில் அடுத்தடுத்து 3 முறை குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் உள்ள கைதிகளை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றும் பணி நடைபெற்ற போது, சிறையில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறை கைதிகள் பலரும் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு சிறை கதவுகளை உடைத்து கொண்டு வெளியே வந்தனர்.

இதில் 216 சிறை கைதிகள் சிறையை விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த வன்முறையின்போது போலீசார் மற்றும் கைதிகள் சிலர் காயமடைந்துள்ள நிலையில் கைதி ஒருவர் தப்பியோட முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டுள்ளார். எனினும், 24 மணிநேரத்தில் தப்பியோடிய கைதிகளில் 78 பேரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். தலைமறைவான 135 கைதிகளில் பலர் கொடூர குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

இதனால் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சிந்து உள்துறை அமைச்சர் ஜியா-உல் ஹசன் லஞ்சார் கூறுகையில், சிறை கைதிகள் தன்னிச்சையாக திரும்பி வந்தால். அவர்களுடைய தண்டனையை குறைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து, கைது செய்தால் பயங்கரவாத ஒழிப்பு சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக சிறை துறையின் உயரதிகாரிகள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.