புலம் பெயர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு வருவோரை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட மோதலில் அந்நாட்டு பிரதமர் மார்க் ரூடே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டிற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சுமார் 47 ஆயிரம் பேர் அடைக்கலம் கேட்டு விண்ணபித்துள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் அந்த எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது. நெதர்லாந்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் மார்க் ரூடே முடிவு செய்தார்.
இதுதொடர்பாக திட்டத்தை அவர் முன்வைத்த போது எதிர்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அதிருப்தி அடைந்த பிரதமர் ரூடே தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 150 உறுப்பினர்களை கொண்ட நெதர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.







