நானியின் திரைப்பயணத்தில் தசராதான் பெஸ்ட்..! இயக்குநர் ராஜமௌலி பாராட்டு

நடிகர் நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வரும் நிலையில், இயக்குநர் ராஜமௌலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில்…

நடிகர் நானியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வரும் நிலையில், இயக்குநர் ராஜமௌலி படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தசரா திரைப்படம் ராம நவமியை முன்னிட்டு மார்ச் 30 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமான படத்தில் , தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் பூர்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் மூலம், ‘மாஸ் ஹீரோவாக’ அகில இந்திய அளவில் தன்னை கொண்டு சென்றுள்ளார் நானி.

தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், அடடே சுந்தரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நானி, ராஜமௌலி இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தசரா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளத்தோடு, இரண்டே நாட்களில் உலகமெங்கும் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தசரா படத்தினை பாராட்டி, கடந்த 20 ஆண்டுகளில், 7 வேறு வேறு நாயகர்களுடன் 12 படங்களை எடுத்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியுள்ள இயக்குனர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் தசரா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் முரட்டுத்தனமான கதாபாத்திரங்களுக்கு மத்தியில், ஸ்ரீகாந்த் ஒடேலா ஒரு மென்மையான இதயத்தைத் தொடும் காதல் கதையை கொடுத்துள்ளார். நானியின் கேரியரில் இதுதான் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். கீர்த்தி சுரேஷ் தனது பாத்திரத்தின் மூலம் நம்மை மெய் மறக்க வைத்துள்ளார்.

ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கவனிக்கத்தக்கது. ஒளிப்பதிவு முதல் தரம். பின்னணி இசைக்கு சிறப்புக் குறிப்பு. படம் வெற்றி பெற்ற தசரா குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ssrajamouli/status/1642820637592006656?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.