முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மழையோ மழை என பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளம் ஓடுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் கூட்டத்தின், கேள்வி நேரத்தில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், ”கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில், கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு ஏற்பட்ட பெருவள்ளத்தின் காரணமாக கரைகளில் உடைப்பு ஏற்பட்டு நகர, கிராம பகுதிகளில் நீர் புகுந்து பெரும் சிரமத்திற்கும் சேதாரத்திற்கும் உள்ளாகின. இந்த ஆற்றின் கரைகளை சீரமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யவில்லை, கரை உடையவில்லை. ஆனால் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகு, மழையோ மழை என பெய்து எங்கு பார்த்தாலும் வெள்ளம் ஓடுகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இதெல்லாம் நடைபெறுவதால் எவை முக்கியமானதோ அதை உடனடியாக செய்து தருவோம்” என்றார். அமைச்சர் துரைமுருகன் கொடுத்த இந்த பதிலால் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.







