மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு

பருவ மழை முடியும் வரை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக அவரவர் பகுதியில் இருக்க வேண்டும் என பருவ மழை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

பருவ மழை முடியும் வரை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக அவரவர்
பகுதியில் இருக்க வேண்டும் என பருவ மழை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில்
அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சென்னை 6,7,8 ஆகிய மூன்று மண்டலங்களுக்கும் சேர்த்து திரு.வி.க. நகர் மண்டலத்தில பருவ மழை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன் மற்றும் மண்டல அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

தற்போது சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள், மின்சார வாரிய பணிகள், நெடுஞ்சாலைத்துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்த போதிலும் விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அந்த பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன அதன் மூலம் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சில இடங்களில் 20% பணிகள் முடித்தால் முழு பணியையும் முடித்து விடலாம் என்ற நிலை உள்ளது. அவை எந்தெந்த இடம் என்பது குறித்து முன்கூட்டியே தெரிவித்தால் கூடுதல் பணியாளர்களை வைத்து விரைவாக அந்த பணிகளை முடிக்க முடியும்.

மழை நீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் குறிப்பிட்ட அந்த இடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதேபோன்று எந்தப் பகுதியில் மரங்கள் பலவீனமாக உள்ளது என்பதை கண்டறிந்து பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களை முறையாக பராமரிக்க வேண்டும் மாநகராட்சி மண்டபங்களை
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் மழைக் காலத்தில்
பொதுமக்களுக்கு சமைப்பதற்கு மருத்துவ உதவிகள் செய்வதற்கும் மாநகராட்சி
மண்டபங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குழு அமைத்து அதில் அனைத்து துறை அதிகாரிகளும் இருக்கும்படி செய்து  கொள்ள வேண்டும்.  மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு மனக்கசப்பு ஏற்படாத வாறு பணியாற்ற வேண்டும். ஜேசிபி இயந்திரங்கள் கட்டிங் மிஷின்கள் மற்றும் மோட்டர்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார் அமைச்சர் சேகர் பாபு.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்தித்த மேயர் பிரியா, சென்னை
மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்வதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும் மழை காலத்தில் ஏற்படும் தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.