காவல்துறை உதவி ஆணையர் எனக் கூறி பலரையும் ஏமாற்றிய நபர் முகநூல் மூலம் பெண்களிடம் பழகிப் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் விஜயன். இவர் ஆன்லைன் மூலம் கட்டடம் கட்டும் பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சம் ரூபாய் வரை ஒருவரிடம் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்த நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸ் வாகனம் போல சைரன் வைத்த ஜீப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி பகுதியில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியே வந்த போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் அசிஸ்டன்ட் கமிஷனர் எனவும் தான் மஃப்டியில் உள்ளேன் எனவும் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட விஜயன் முன்னதாக ஒரு செய்தி சேனலில் பணிபுரிந்துள்ளார். அங்கிருந்து வெளியே வந்ததும் தான் அசிஸ்டன்ட் கமிஷனர் என போலியாக ஐடி கார்ட் தயார் செய்து பல கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்து தருவதாகவும் ஏமாற்றியுள்ளார்.
மேலும் முக்கியப் பிரமுகர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து முகநூலில் நட்புடன் பழகிய பெண்களிடம் லட்சக் கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு விஜயன் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும் தான் வேலைக்குச் செல்வதாகக் கூறி தன்னுடைய மனைவிக்கு அந்தப் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுமட்டுமின்றி உதவி ஆணையர் எனக் கூறி பல்வேறு நட்சத்திர விடுதிகளிலும் விஜயன் இலவசமாக தங்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.









