ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 189 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்த வந்த ஷபாஸ் அஹமதும் 2 ரன்களில் வெளியேற, தொடக்கத்திலேயே பெங்களூர் அணி தடுமாறியது.
இதையும் படியுங்கள் : 12 மணி நேர வேலை – மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!!
பின்னர் கைகோர்த்த டூ பிளெசிஸ் – க்ளென் மேக்ஸ்வெல் ஜோடி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, பந்துவீசாளர்களை கலங்கடித்தனர். டூ பிளெசிஸ் 39 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியாக அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.







