கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தக்கோரி, ஆகஸ்ட் 1-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில், டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்கிறார்கள்.
கோடநாட்டில், ஜெயலலிதா மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்தனர்.
தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்கிழமை அன்று 10:30 மணிக்கு கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







