முன்னாள் காதலியின் வீட்டுக்குள் ஜன்னல் வழியாக நுழைய முயன்ற போதை இளைஞர், சிக்கிக்கொண்டு தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காதல், ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாகப் படுத்தி எடுக்கிறது. அதற்காக எதையும் செய்ய துணிகிறார்கள் இளங்காதலர்கள். பிரேக்கப்பும் அப்படித்தான். அதைத் தாங்க முடியாதவர்கள் விவகாரமான வேலைகளில் இறங்குவதும் உண்டு. இந்த சம்பவமும் அப்படியே.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கெர்சன் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் அவர். அவர் காதலி, திடீரென பிரிந்துவிட்டார். தாங்க முடியவில்லை அவருக்கு. சில நாட்கள், ஃபுல் போதையில் நண்பர்களிடம் புலம்பினார். பிறகு ஒரு நாள், காதலியின் வீட்டுக்குள் புகுந்து, ’ஏன் இப்படி பண்ணின?’ என்று ஆவேசமாகக் கேட்க முடிவு செய்தார்.
அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். சில நாட்களுக்கு முன், வழக்கம் போல மூச்சுமுட்ட சரக்கடித்தார். போதை தலைக்கேறியதும் காதலி வீட்டின் வாசல் வழியே போனால், சிக்கலாகும் என்று, பின்பக்க ஜன்னலை திறந்து உள்ளே நுழைய முயன்றார்.
ஆனால், சுவரில் ஏறிய அவரால், ஜன்னலை ஒரு கட்டத்துக்கு மேல் திறக்க முடியவில்லை. கொஞ்சமாகத்தான் திறந்தது ஜன்னல். அதன் வழியே புகுந்து செல்ல முயன்றார். பாதி உடல் நுழைந்த நிலையில் மீதி நுழையவில்லை. உள்ளே வெளியே என்ற நிலையில் சரிவாகச் சிக்கிக்கொண்டார். போதையில் வேறு இருந்தாரா, முட்டி மோதிப் பார்த்தும் முடியவில்லை. பிறகு அப்படியே மயங்கி, தொங்கிவிட்டார். எத்தனை மணி நேரம் இப்படி தொங்கிக் கொண்டி ருந்தார் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, தற்செயலாக பின்பக்க அறைக்கு வந்த முன்னாள் காதலிக்கு முகமெல்லாம் குபுக். ’அடப்பாவி, இவன் ஏன் இங்க வந்தான்?’ என்று குழம்பிய அவர், உடனடியாக போலீசு க்கு போன் செய்தார். விரைந்து வந்த போலீசார், ஒரு வழியாக ஜன்னலை உடைத்து அவரை மீட்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள், பழைய சினிமா பட ஸ்டைலில், ‘நல்லவேளை சீக்கிரமாக கொண்டு வந்தீங்க.. கொஞ்சம் லேட்டாயிருந் தாலும் உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கும்’ என்று கூறிவிட்டு சிகிச்சை அளித்துள்ளனர். அவருக்கு ஏற்கனவே மூச்சுவிடுவதில் பிரச்னையாம். இந்த காதல் சம்பவம் உக்ரைனில் பரபரப்பாகி இருக்கிறது.









