உலகிலேயே முதல் முறையாக கோவையில் பறை இசை மாநாடு.. 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்க உள்ளன..!!!

உலகிலேயே முதல் முறையாக பறை இசை மாநாட்டை நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றது. பறை இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக நடத்தபப்டும் இந்த மாநாடு குறித்த சிறப்பு…

உலகிலேயே முதல் முறையாக பறை இசை மாநாட்டை நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றது. பறை இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக நடத்தபப்டும் இந்த மாநாடு குறித்த சிறப்பு தொகுப்பு….

நிமிர்வு கலையகம், கடந்த 12 ஆண்டுகளாக பறை இசையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக தொடர்ந்து கலைப்பணிகளை ஆற்றி வருகிறது. இக்கலையகம் பறை இசையை அனைவருக்கும் கற்பிக்க, இசைப்பள்ளிகளை உருவாக்கியது மட்டுமின்றி , கலைஞர்களுக்கு உதவிட மக்கள் உதவிக்குழு என்ற திட்டத்தினையும் தொடங்கி, நூல்கள் மற்றும் களப் பணிகளுக்கு பறை ஆய்வு நடுவம் என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது.

ஆதி தமிழர்களின் இசைக்கருவியான பறையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது. அதன் ஒரு முயற்ச்சியாகத்தான் , நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க் கல்லூரியில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பறை இசை மாநாடு நடைபெற்றது. பறை இசையை இசைத்து மாநாட்டை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். பறை இசையை அடுத்த தலைமுறையினரிடம் பண்பாட்டு வடிவமாக மட்டுமல்லாமல் ஒரு பயன்பாட்டு இசைக்கருவியாக பழக்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதற்கான முன்முயற்சியாக 100 க்கும் மேற்பட்ட தொல்லிசைக் கருவிகள் கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.

உலகெங்கும் உள்ள பறைக் குழுக்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யவும், நாட்டார் கலைஞர்களுக்கான தமிழக அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்கவும் கண்காட்சி அரங்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சங்க இலக்கியங்களில் மட்டுமில்லாமல், பக்தி இலக்கியங்களிலும் உள்ள பறை இசையைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ‘இறையும், பறையும்’ என்ற நூல் மற்றும் பறை கற்பதற்கான முதல் பாட நூலான ’பறை கற்போம்’ ஆகிய நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. பறையை அறிவார்ந்த சமூகத்திற்கு எடுத்து செல்லும் நோக்கத்தில் கருத்தரங்குகள் மூத்த ஆய்வாளர்கள் மற்றும் பறை களப்பணியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

மேலும் உலகப் பொதுமறை திருக்குறள்போல, அனைத்து மக்களுக்குமான பொது இசையாக உள்ள பறை இசையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 1,330 திருக்குறள் பறைப்படை என்ற பெயரில் 1,330 பறைகளை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் முழங்கும் நிகழ்ச்சியும், தென்மாவட்டங்கள், கிராமப்புற பகுதிகள் மற்றும் பழங்குடி மக்களிடம் உள்ள இசைக்கருவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் அனைத்து ஜாதியினரையும் வழிபாட்டுத் தலங்களுக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பேரூராதீன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பறைக் கலைஞர்களும், சான்றோர் பெருமக்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.