குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி உறுதியாகி உள்ள அதேநேரத்தில், ஆளும் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவின் வெற்றியும் உறுதியாகி உள்ளது.
அது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி இருந்தால், வரும் ஜூலை 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நேற்று அறிவிக்கப்பட்ட, அடுத்த சில மணி நேரங்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
இதனால் எதிர்பார்த்தபடி போட்டி உறுதியாகி உள்ளது.
அதேநேரத்தில் இந்த தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றியும் உறுதியாகிவிட்டது. காரணம், இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகள் உள்ளன. அதாவது, எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர்களுக்கான மொத்த வாக்கு மதிப்பான 10 லட்சத்து 86 ஆயிரத்து 431ல், ஆளும் கூட்டணிக்கு கைவசம் 5 லட்சத்து 32,351 வாக்கு மதிப்பு இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அதற்குத் தேவை சுமார் 20 ஆயிரம் வாக்கு மதிப்பு மட்டுமே.
ஆனால், 31,686 வாக்கு மதிப்புகளைக் கொண்டுள்ள பிஜூ ஜனதா தளம், திரெளபதி முர்முவுக்கு தனது ஆதரவை உறுதி செய்துள்ளது. இதுவே திரெளபதி முர்மு வெற்றி பெற போதுமானது.
எனினும், பிஜூ ஜனதா தளம் மட்டுமல்லாது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியில் இருக்கும் 45,550 வாக்கு மதிப்புகளைக் கொண்டுள்ள YSR காங்கிரஸ், 14,940 வாக்கு மதிப்புகளைக் கொண்டுள்ள அதிமுக ஆகிய கட்சிகளும் திரெளபதி முர்முவுக்கே ஆதரவு அளிக்கும்.
இவை மட்டுமின்றி, பழங்குடி மக்கள் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஷிரோமணி அகாலி தளம், தெலுகு தேசம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவும் முர்முவுக்கே.
அதோடு, தற்போது சிவ சேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்துள்ள எம்எல்ஏக்களின் ஆதரவும் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கே கிடைக்கும்.
கட்சி யாரை ஆதரிக்கிறது என்பதைத் தாண்டி, இந்த தேர்தலில் விருப்பப்படி வாக்களிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணை, பாஜக வேட்பாளராக நிறுத்தி இருப்பதால், அவருக்கு பல்வேறு எதிர்க்கட்சி வாக்காளர்களின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சுமார் 70 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த குடியரசுத் தலைவராவதற்கான வாய்ப்பு திரெளபதி முர்முவுக்கே இருக்கிறது.